ஹெய்தி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
கரீபியன் கடலில் இருக்கும் சிறிய தீவு ஹெய்தி. கியூபா, ஜமைக்காவுக்கு கிழக்கேயும், பஹாமா நாட்டுக்கு தெற்கேயும், டோமினிக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்தும் அமைந்துள்ளது.
ஹெய்தியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் நேற்று திடீரென 7.2 புள்ளி ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த பூகம்பம் ஹெய்தியின் தெற்குப்பகுதி மாநிலத்தில் நிகழ்ந்தது. வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற முடியாமல் இடிபாடுகளில்சிக்கி பலர் உயிரை விட்டனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் இடிந்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இன்னும் சேதவிவரங்கள் குறித்து முழுமையானத் தகவல்கள் இல்லை.
மீட்புப்படையினர், போலீஸார், தீயணைப்பு்படையினர், தன்னார்வலர்கள் என மீட்புப் நடவடிக்கையில் ஈடுபட்டு, இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர். காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்துள்ளதால் 1800்க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கலாம் என தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஹெய்தியில் ஒரு மாதம் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஹென்றி அறிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாக அறியும்வரை சர்வதேச உதவி கோரப்போவதில்லை எனவும் ஹெய்தி அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஹெய்தி நாட்டுக்கு தேவையான உதவிகள் மனிநேய அடிப்படையில் வழங்கப்படும் என்று ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கியூபா அரசு தங்கள் நாட்டிலிருக்கும் 250க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஹெய்திக்கு அனுப்பி வைத்துள்ளது.
மெக்சிக்கோ, சிலி, அர்ஜென்டினா,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசுகளும் ஹெய்திக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே இன்று (அந்நாட்டில் நள்ளிரவு) மீண்டும் ஹெய்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 என்று பதிவாகியுள்ளதாகத் அமெரிக்க நிலவியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடனடியாக ஹெய்தி நாட்டுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மீட்பு நடவடிக்கையில் உதவும் அமெரிக்க உதவி நிர்வாக இயக்குநர் சமந்தாவுக்கு உத்தரிவிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில் லே கேயஸ் நகரின் முன்னாள் மேயரும், நீண்டகாலம் எம்.பியாக இருந்தவருமான கேப்ரியல் பார்டியூன் உயிரிழந்தார். இவர் தங்கியிருந்த லீ மான்குயர் ஹோட்டல் இடிந்து விழுந்ததால், கேப்ரியல் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெஸ் கேயாஸ் நகரிலிருந்து 10.5 கிமீ தொலைவில் இருக்கும் எல்லி வாசே எனும் தீவில் இருக்கும் புகழ்பெற்ற தங்கும்விடுதியும் சேதமடைந்துள்ளது. இந்த தங்கும் விடுதிக்கு அவ்வப்போது ஏராளமான தலைவர்கள்,தொழிலதிபர்கள், ஆர்வலர்கள் என வருகை தருவார்கள்.