திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22-ம் தேதியும், தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடக்க உள்ளன.

பிரசித்தி பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் தனித்தனியே பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாளை காலை 8.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, தினமும் புன்னைமர வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22-ம்தேதி காலை 5.30 மணி அளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து, 23-ம்தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நடைபெறும்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்ந்து, தினமும் சுவாமிவீதி உலா நடைபெறும். மார்ச் 1-ம்தேதி இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.

விழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில்செய்யப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.