தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் செ.பா.பாவாணன், சசி கலைவேந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த செயலில் ஈடுபட்டோரை உடனே கைது செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை அதிக உள்ளது. எனவே, இம்மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

அரசு ஒப்பந்தங்கள் எடுப்பது, கோயில் குளங்களில் மீன்பிடி ஏலம் எடுப்பது உள்ளிட்டவற்றில் பட்டியலின மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு அதிகாரிகளே காரணம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தவரை கூட்டணிக்குள் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே வேளையில், பட்டியலின மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம். வேங்கைவயல் விவகாரத்தில் ஒரு சில அமைப்புகளைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது என்றார்.