அமெரிக்காவின் ‘டைம்’ இதழ்வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘டைம்’ இதழ் செயல்படுகிறது. இந்த இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘டைம் 100′ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியலை ‘டைம்’ இதழ் நேற்று முன்தினம் வெளியிட்டது. பிரபலமானவர்கள், முன்னோடிகள், முக்கியமானவர்கள், கலைஞர்கள், தலைவர்கள், புதுமை படைத்தவர்கள் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களை ‘டைம்’ இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் ‘தலைவர்கள்’ பிரிவில் பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.

‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘‘நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக பிரதமர்நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014, 2015, 2017, 2020-ம் ஆண்டுகளில் வெளியான ‘டைம் 100′ பட்டியலில் பிரதமர் மோடி இடம்பிடித்தார். தற்போது ‘டைம்’ இதழ் மீண்டும் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

‘டைம் 100’ பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பிடித்துள்ளார். அமெரிக்கஅதிபர் ஜோ பைடன், துணை அதிபர்கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆப்கானிஸ்தான் துணை பிரதமர் அப்துல் கனி பராதர், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட், ஈரான்அதிபர் இப்ராகிம் ரைசி உள்ளிட்டோரும் பட்டியலில் இடம்பெற்றுள் ளனர்.

‘டைம் 100’ முன்னோடிகள் பிரிவில் இந்தியாவின் சீரம் நிறுவன தலைவர் அடார் பூனவல்ல இடம்பிடித்துள்ளார். சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.