பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து பிரதமர் பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகள் தனித்தனியாக விசாரணைக் குழு அமைத்தன. அதேநேரம் என்ஜிஓ வழக்கறிஞர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கொண்டுச் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையின் முடிவில், “பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தின் ஆவணங்களைச் சேகரித்து வைப்பதுடன், அந்த ஆவணங்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றப் பதிவாளர் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பஞ்சாப் மாநில அரசு சார்பில் முதலில் வாதிட்ட வழக்கறிஞர், “அரசியல் காரணங்களால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு சார்புடன் செயல்படுகிறது. மத்திய அரசு அமைத்துள்ள குழுவின் விசாரணையால் எந்த நியாயமும் கிடைக்காது” என்று தெரிவித்தார். வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் “பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு எந்த சார்பும் இல்லாமல், தன்னிச்சையாக சுதந்திரமான குழுவாக செயல்படும்.

இந்த விசாரணைக் குழுவில் சண்டிகர் டிஜிபி, தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) ஐ.ஜி, பஞ்சாப் பாதுகாப்பு துறையின் ஏடிஜிபி ஆகியோருடன், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் பதிவாளரும் இடம்பெறுவர். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசும் சரி, பஞ்சாப் அரசும் சரி இனி எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.