ஏழைகளின் பயணச்சுமையை குறைப்பதற்காக அரசு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பேருந்துகளில் வழங்கப்படும் வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் கனிவான சேவைக்காகவும் அரசு பேருந்து கழகங்களில் உள்ள சில சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அரசு பேருந்துகளில் இன்று குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்துகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன. இவற்றை களைய வேண்டுமென்றால், பொருட்செலவு அதிகமாகும். அதே மாதிரி சேவை உள்ள தனியார் பேருந்துகளில், கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், அவர்களால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யமுடிகிறது. இதனை களைய அரசு புதுத்திட்டத்துடன் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. பேருந்து சேவையை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துவிடும். இதனை தவிர்க்க சில சேவைகளை மட்டும் தனியாரிடம் ஒப்படைப்பது என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து கழகங்களில் உள்ள பராமரிப்புச் சேவை, பாடி பில்டிங், பாதுகாவலர் நியமனம், கேன்டீன் போன்றவற்றை மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அரசு பேருந்து கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுடன் இணைந்து அரசு ஆலோசனை கூட்டம் ஒன்றினை திருச்சியில் நடத்தியுள்ளது. அப்போது உயர்ந்து வரும் எரிபொருள் விலையினால் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றை களைய இதுபோன்ற முயற்சித் தேவை என மேலாண்மை இயக்குநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. அதேநேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையும் பாதிக்கப்படாமல் இருக்க, நேர காப்பாளர்கள் பேருந்துகள் சரிவர இயங்குகின்றனவா ? போதிய கூட்டம் பேருந்துகளில் உள்ளனவா ? என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல், சில எளிமையான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.  பள்ளி மாணக்கர்களுக்கு வழங்கும் இலவச பாஸ் போன்ற சேவைகளும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தனியார் மயமாகும் நடைமுறையை டெல்லி அரசு பின்பற்றி வருகிறது. இதன் மூலம் 30 முதல் 50 சதவீத செலவினங்கள் கட்டுக்குள் வந்துள்ளது. அஹமதாபாத்திலும் 7 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தமிழக அரசு போக்குவரத்து கழகங்களால் அரசுக்கு இந்த நிதியாண்டு மட்டும் 6ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது