கோவைப்புதூர் பகுதியில் யானை தாக்கி தனியார் காவலாளி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவைப்புதூர் மலை அடிவாரத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அங்கு இரவு நேரக் காவலாளியாக கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (62) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கமான காவல் பணியில் இருந்த அவர், இன்று (ஜூலை 27) காலை 6 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதியில் இருந்த ஒற்றை காட்டு யானை, முத்துசாமியைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை, வனத்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துசாமியின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தடாகம், மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் இரவு, அதிகாலை நேரங்களில் அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.