வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக இருந்த கருக்கலைப்புக்கு தடை வந்திருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தரப்பில், “இது நாட்டிற்கு சோகமான நாள். இந்த தீர்ப்பு நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.பெண்களின் உடல் நலம்,வாழ்க்கை கேள்விக்குரியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பெண்கள் நல அமைப்புகள், “ நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதை காட்டுகிறது. இத்தீர்ப்பு லட்சக்கணக்கான பெண்களை பாதிப்புக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற சபா நாயகர் நான்சி பேசும்போது, “ இத்தீர்ப்பு பெண்களின் முகத்தில் அறைந்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உச்ச நீதிமன்றம் உள்ளதை இத்தீர்ப்பு காட்டியுள்ளது. அவர்கள் இருண்ட பகுதிக்கு பெண்களை அழைத்து சென்றிருக்கிறார்கள். பெண்களின் உரிமையை பறித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க பிரபலங்கள் கடும் எதிர்ப்பு: கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவலையளிக்கிறது. பெண்ணின் உடல் சார்ந்த உரிமை அப்பெண்ணுக்கு உள்ளது. உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பு அபத்தமானது என்று அமெரிக்க பிரபலங்கள் பலரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெண்கள் பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.