தேசவிரோதக் கருத்துகளைத் தெரிவித்தல், மாணவர்கள் மத்தியில் போதித்தல் போன்றவை கூடாது என்று அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் காசர்கோட்டில் உள்ள கேரள மத்தியப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனுமதியுடன் கடந்த மாதம் 30-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பேராசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்தும், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும், கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் வெளியானவுடன் ஏபிவிபி அமைப்பினர் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அந்தப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில் அலுவலர்கள், ஊழியர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24-ம் தேதி நடந்த 51-வது பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் துணைப் பேராசிரியர் பேசிய பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அந்த துணைப் பேராசிரியர் பேசியது தேசவிரோதமானது. பேராசிரியர்கள், அலுவலர்கள் இதுபோன்று சர்ச்சைக்குரிய பேச்சில் ஈடுபடாமலும், மாணவர்களுக்கு தேசவிரோதக் கருத்துகளை போதிக்காமலும் ஒதுங்கி இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் தேசத்தின் நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், “அலுவலர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆத்திரமூட்டும் பேச்சுகள், கருத்துகளைக் கூறுவது தேசவிரோதமாகும். அது தேசத்தின் நலனுக்கு எதிரானது. இதுபோன்று எதிர்காலத்தில் யாரேனும் நடந்துகொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கை கருத்து சுதந்திரத்தையும், கல்வி கற்கும் சுதந்திரத்தையும் பறிப்பதாக இருக்கிறது. இதனால் வகுப்பறையில் எந்த விவகாரம் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்று பல்வேறு பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.