நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகான அவரது முதல் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெறப்பட்ட முதலமைச்சர் பொதுநிவாரண நிதியான ரூ.543 கோடியில் இருந்து 541.64 கோடி ரூபாய் நிவாரண பணிகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் ஒன்றிய அரசு நிறுத்திவிட உள்ள நிலையில் அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தர வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை.
* 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்தும் வகையில் `ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி’ என்ற விரிவான செயல் திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 100 நாட்களில் 2.29 லட்சம் மனுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ திட்டத்தின் கீழ் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
* ஜனவரி 12ம் தேதி `அயலகத் தமிழர் நாளாக’ அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நலச்சங்கங்களை ஒன்றிணைத்து தாய் தமிழ்நாட்டில் அவர்களின் முதலீடுகளை பெற நடவடிக்கை.
* தமிழ்கத்தில் இருக்கும் கனிம வளங்கள் மூலம் அதிக வருவாய் பெற `இயற்கை வள மேலாண்மை திட்டம்’ ஒன்று வகுக்கப்படும்.
* இயற்கை சீற்றங்களிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழகத்தில் உள்ள இயந்திர படகுகளில் தகவல் தொடர்பு கருவிகளை (transponders) அரசு சார்பில் நிறுவப்படும்.
* சிட்கோ மூலமாக தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய தொழிற்பேட்டைகள் ரூ.241 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.
* இருமொழிக்கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது
* விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், 8,600 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
* நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மாநிலக் கல்வி அமைப்பின் முதுகெலும்பாய்த் திகழும் அரசுப் பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டிலுள்ள 24,345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms), உயர்ந்துவரும் மாணவர் சேர்க்கைக்கேற்பப் புதிய கட்டடங்கள், 6,992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள், அனைத்துப் பள்ளிகளுக்கும் அகன்ற அலைவரிசை (broadband) வசதி, தூய்மையான பராமரிப்புடன் கூடிய சுகாதார வளாகங்கள் உருவாக்கப்படும். இவை மட்டுமன்றி, நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் வளர்ப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
* புதிய சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
* பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டிலுள்ள 145 பெரியார் சமத்துவபுரங்கள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னை உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வரலாறு காணாத மழைப் பொழிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டன. இந்தமுறை துல்லியமான திட்டமிடல், திறன்மிகு மேலாண்மை, தீவிர மேற்பார்வையின் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. இருப்பினும், சாலைகள், பாலங்கள், நீர்நிலைகள் போன்ற கட்டமைப்புகளும், பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 6,230 கோடி ரூபாய் நிதியைக் கோரி விரிவான கோரிக்கைகளை இந்த அரசு அளித்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மறுசீரமைக்க, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
* “நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். – விரிவாக வாசிக்க > “நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை” – மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதாக ஆளுநர் உரையில் தகவல்