குன்னூர்: அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையிலும் மாணவ மாணவிகளின் தனித் திறமையினை வெளிக் கொணரும் விதமாக புதியன விரும்பு என்ற தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் பாடங்களை மட்டும் கற்பதை காட்டிலும் மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் மற்றும் தன்னுள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் தெரியாதை கற்றுக் கொள்ளவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “மலை மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லை. இதை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படவுள்ளது.

பழங்குடியினர் கல்வி கற்க தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம்” என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், கல்வித்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here