தமிழ்நாட்டின் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த விவரம் குறித்த பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழ்நாட்டில் மொத்தம் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 3,04,89,866 வாக்காளர்களும், பெண்கள் 3,15,43,286 வாக்காளர்களும், 8,027 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

வெளிநாட்டில் 3,310 வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகமாக 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்ததாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,57,408 வாக்காளர்களும் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,70,125 வாக்காளர்கள் உள்ளனர். 4,48,138 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 18-19 வயதில் 4,66,374 வாக்காளர்களும் உள்ளனர்.

இதற்குப் பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பிக்கலாம். இதுவரை 3.28 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்கள் இணைக்கபட்டு உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் அளிக்கவுள்ளோம். ரூ.100 கொடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் பெறலாம். வாக்காளர் பட்டியல் சந்தேகங்களுக்கு 1950 எண்ணை தொடர்பு கொள்ளலாம். 1800 4252 1950 என்ற தலைமைத் தேர்தல் அலுவலக எண்ணிற்கும் அழைக்கலாம்.

1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அளிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் கட்சிகளின் முகவரிகள் அளித்திருந்தார்கள். அந்த கட்சிகளுக்கு அனுப்பியிருந்தோம். தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படியே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பட்டது என்று கூறினார்.