நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களுடன் முற்றுகையிட்டார்.

புதுச்சேரி நகரத்திற்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டது. ஆனால், போதிய உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சாதனங்கள் இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டது. இதனால் புதிய மருத்துவமனை திறக்கப்பட்டும் அது நோயாளிகளுக்கு பயன்படாத நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது அந்த மருத்துவமனை கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அரசின் கவனத்திற்கு கொண்டு எதிர்கட்சி தலைவர் சென்றார்.

இந்நிலையில், மருத்துவமனை ஆம்புலன்சிற்கு ஓட்டுநர் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லாமல் நோயாளிகளை அலைகழிப்பதாகவும், சிலருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்புவதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை, கழிப்பிட வசதி, ஈசிஜி வசதி இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று திடீரென வில்லியனூர் அரசு மருத்துவமனையை பொதுமக்களுடன் சென்று முற்றுகையிட்டார். இதுகுறித்து பணியில் இருந்த தலைமை மருத்துவர் திலகவதி துறை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

பின்னர், உடனடியாக வில்லியனூருக்கு சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர்கள் டாக்டர் முரளி, டாக்டர் ரகுநாதன், மருத்துவ அதிகாரி டாக்டர் வேல்முருகன் ஆகியோர் வந்தனர். அங்கு முற்றுகையில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, பொதுமக்களை சமாதானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர், வில்லியனூர் அரசு பொதுமருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போதிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். ஈசிஜி வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதையடுத்து சுகாதாரத் துறை இயக்குநர் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.