எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நிதிஷ்குமார் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சிறுவனை மீட்ட பெற்றோர் ஆலங்குடி தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாப்பான் விடுதி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலிஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நிதிஷ்குமாரின் பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தும், சிறுவனின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:

“புதுக்கோட்டை மாவட்டம் பாபான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று லட்சம், உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.