மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இ்ன்று (நவ.15) தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் தெம்மாவூர் அருகே கொப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.வீரமணி (19). இவர், 18 வயதுடைய ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடந்த 2019-ல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா இன்று தீர்ப்பளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட வீரமணி மீது குற்றம் நீரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார். தீர்ப்புக்குப் பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு வீரமணி அழைத்து செல்லப்பட்டார். வழக்கு விசாரணை முறையாக செய்த கீரனூர் காவல் நிலையத்தினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டினார்.