பஞ்சாபில் பிப்ரவரி 6 ஆம் தேதி காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. இதற்கு ஏதுவாக 300 யூனிட்இலவச மின்சாரம், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1,000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிக்காததால் அக்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் கடந்த 2017 தேர்தலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் வேட்பாளராக அறிவித்தபடியே, அப்பதவியில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கை அமர்த்தியது.

பாஜக.வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் அம்ரீந்தர் சிங்குக்கு மோதல் ஏற்பட்டது. இதனால்,அம்ரீந்தர் பதவி நீக்கப்பட்டார். அதன்பின்னர், நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். முதல்வராக சன்னி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடனும் இப்போது சித்து பகிரங்கமாக மோதி வருகிறார்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளது. தலித் சமூகத்து சன்னியை முதல்வர் வேட்பாளராக்கினால், சித்துவின் ஜாட் சீக்கியர் வாக்கு கள் பெறுவது காங்கிரஸுக்கு சிக்கலாகி விடும். இதற்காக, முதல்வர் சன்னியை 2 தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தி, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

அப்படி செய்தால், சன்னி சார்ந்துள்ள தலித் சமூகத்தின் வாக்குகளையும் ஜாட் சீக்கியர்கள் வாக்குகளையும் பெற முடியும் என்று காங்கிரஸ் திட்டமிடுகிறது.

அதேநேரத்தில் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் யார் என்பதை முடிவு செய்யலாம் எனற ஆலோசனையும் நடைபெற்றது. எனினும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் தலைவர்ர ராகுல் காந்தி முடிவு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி தனது சமீபத்திய பஞ்சாப் பயணத்தின் போது, இருவரில் யாரையாவது முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், சன்னி மற்றும் சித்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதாக உறுதியளிப்பதாக கூறியிருந்தனர்.

இந்தநிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய சரண்ஜித் சிங் சன்னி அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இருவரில் ஒருவர் முதல்வர் வேட்பாளரா அல்லது புதிய நபரா என்ற சஸ்பென்ஸுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.