பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள அரசு நிலத்துக்குப் பதிலாகதங்களுக்கு சொந்தமான நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி அருகே பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களில் உள்ள சுமார் 177 ஏக்கர் நிலத்தை சமுத்திரபேடு ஜமீன்தாரரின் மகனான வெங்கைய்யா என்பவர் பாப்பான்சத்திரம் காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலீஸ்வரர் கோயில்களுக்கு கடந்த 1884-ல்தானமாக உயில் எழுதி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் அனாதீன நிலமாக அறிவிக்கப்பட்ட சுமார்21.06 ஏக்கர் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் நிறுவனம் பொழுதுபோக்கு பூங்காவை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிலத்துக்கு வருவாய் துறையினரும், அறநிலையத்துறையினரும் சட்ட ரீதியாக சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இதுதொடர்பாக நில நிர்வாக ஆணையர் முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ள 21.06 ஏக்கர் நிலத்தை காலி செய்யக்கோரி பெரும்புதூர் வட்டாட் சியர் கடந்த 2013-ம் ஆண்டு

பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையி்ல் இருந்து வருகிறது.

இந்நிலையில், குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை நடத்திவரும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில், ‘‘குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்போது இயங்கி வரும் அரசு நிலத்துக்குப் பதிலாக தங்களுக்கு சொந்தமான அதே கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தை மாற்று இடமாக எடுத்துக் கொள்ளக்கோரி தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. அதிக பொருட்செலவில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

அதை தற்போது வேறு இடத்துக்கு மாற்றுவதாக இருந்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே எங்களது கோரிக்கையை பரிசீலித்து தற்போது பூங்கா செயல்பட்டு வரும் நிலத்தில் தலையீடு செய்யக்கூடாது, என உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘ மனுதாரர் தரப்பு ஏற்கெனவே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அங்கு பொழுதுபோக்கு பூங்காவை நடத்தி வருகிறது. தற்போது அந்த நிலத்துக்குப் பதிலாக மாற்று இடம் வழங்குவதாக கூறுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசே அனுமதிப்பது போல் ஆகிவிடும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என நிராகரித்து கடந்த ஜூலை 14 அன்று பதிலளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.