காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த யாத்திரையின் 56வது நாளில் அவர் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது ஒரு சிறுவன் கராத்தே செய்து காட்ட அவருக்கு சில நுணுக்கங்களை திருத்திக் கொடுத்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியும் ஐகிடோ என்ற கராத்தே முறையில் பிளாக் பெல்ட் பெற்றவர். அதனால், அவர் அந்தச் சிறுவனுக்கு உதவினார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. கூடவே, “ராகுல் காந்தி குழந்தைக்கு சரியான நுட்பத்தை சொல்லிக் கொடுத்துள்ளார். ஏனெனில் எந்த ஒரு முயற்சியிலும் அதற்கான நுட்பம் தவறானதாக இருந்தால் அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுவிடும்” என்று பதிவிட்டுள்ளது.

ராகுல் காந்தி நேற்று ஹைதராபாத்தில் மேற்கொண்ட நடைபயணத்தில் பாலிவுட் நடிகை பூஜா பட் கலந்து கொண்டார். பட்டன்சேரு என்ற இடத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ராகுல் காந்தியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினார். அதைப் பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடி அவரை மகிழ்வித்தார்.

நேற்று முன் தினம் சார்மினாரில் தேசியக் கொடி ஏற்றினார் ராகுல் காந்தி. இந்நிலையில், அன்றைய தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா என்ற பட்டியலின மாணவரின் தாய் ராதிகா வெமுலா ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.