ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக கோவைக்கு பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் காசிக்கு அடுத்து மிகப்பெரிய யாத்ரீக நகராக ஜோதிர்லிங்க ஸ்தலமாக விளங்குவது ராமேஸ்வரம். ராமாயண காலம் தொட்டு புராதானமாக விளங்கும் இந்த நகருக்கு இந்தியா தவிர உலகெங்கும் யாத்ரீகர்கள் வருகிறார்கள். இதுதவிர இந்தியாவின் கடைக்கோடி முனையான கன்னியாகுமரியை போல தனுஷ்கோடி எனும் அழகிய நீண்ட கடற்கரையை கொண்ட இடமாகவும், பாம்பனில் குந்துகால் எனும் விவேகானந்தர் மணிமண்டபம் என பல்வேறு சுற்றுலா தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு செல்வதற்கு போதிய ரயில் வசதிகள் இல்லை.

அதேபோல தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழில் நகரமாகவும் தென்இந்தியாவின் மான்செஸ்ட்டராகவும் கோவை விளங்குகிறது. இதனால் தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் பஞ்சாலைகள்,பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், மோட்டார் உற்பத்தி என்று பல்வேறு வேலைகள் நிமித்தமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர் ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களிலிருந்து அதிகளவில் மாணவ,மாணவிகள் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

தென்மாவட்டங்களிலிருந்து கடல் உணவுகள், தென்னை, கருவேல மரங்களில் இருந்து தயாராகும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வர்த்தகம் தொடர்பாக அதிகளவில் கோவைக்கு பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யம் வியாபாரிகளுக்கு பயணநேரம் மிக முக்கியமாகும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு தென்மாவட்டங்களிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், ஆம்னிபஸ்கள் இயக்கப்பட்டாலும் கோவைக்கு நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து பகல் நேர பயணிகள் ரயில், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என இரவு நேர சூப்பர்பாஸ்ட் ரயில் என 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த இரண்டு ரயில்களும் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த 2 ரயில்களும் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வில்லை. ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் இருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் 8 மணி 45 நிமிடங்கள் என அதிக பயணநேரத்தை எடுத்து கொள்கின்றன. இதனால் வயதானோர், மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் நீண்டநேரமாக இருக்கையில் இருப்பதற்கு கால்களை நீட்டி அமர்ந்திருப்பது, கழிவறை செல்வது என இயல்பாக இருக்க முடியாமல் கடும் அவதியடைகின்றனர்.

ரயில் பயணி வரதராஜன் கூறுகையில், ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடியில் இருந்து தினமும் 25க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கோவைக்கு செல்கிறது. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக கோவை செல்வதற்கு அரசு பஸ்கள் 8 மணி 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இடையில் சில இடங்களில் உணவகங்களில் அரை மணிநேரத்திற்கும் மேல் நிற்கிறது. இதனால் வயதானோர், மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் நீண்டநேரமாக இருக்கையில் இருப்பதால் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

எனவே ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை, மதுரை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டால் பயணிகள் சிரமமின்றி சென்று வரமுடியும். இதன் மூலம் 5 மணி நேரத்தில் கோவை சென்றுவிடலாம்.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ராமேஸ்வரத்திலிருந்து பகல்நேரத்தில் பயணிக்கும் வகையில் ராமநாதபுரம்,பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.