ராமேசுவரம்: இலங்கை மக்களுக்கு தமிழக அரசினால் புதன்கிழமை சென்னையிலிருந்து அரிசி, பால் பவுடர், மருத்துவப் பொருட்கள் அனுப்பப்பட்ட கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பை சென்றடைந்தது. நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக முதல்வரால் தமிழக சட்டப் பேரவையில் 29.04.2022 அன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அப்பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்ப உரிய அனுமதி வழங்குமாறு 31.03.2022 அன்று டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த போது தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினார். அதுபோல, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் கோரிக்கை வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 18.05.2022 புதன்கிழமை அன்று இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.45 கோடி ரூபாய் மதிப்பில் 9000 டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ‘டான் பின்-99’ என்ற சரக்குக் கப்பலில் சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

 

 

 

நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பை சென்றடைந்தது. கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே பெற்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான உறவு பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் இந்தியாவினால் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் வரவேற்கத்தக்கது. இந்த நிவாரண பொருட்கள் இலங்கை மக்கள் அனைவருக்கும் விரைவாக பகிர்ந்தளிக்கப்படும்” என்றார்.

மேலும் ”ரூ.200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இதனை வழங்கிய இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பதிவின் முலம் நன்றியை தெரிவித்துள்ளார்.