பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுள்ளார். பகவந்த் மானுடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

டெல்லியில் உள்ள மொஹல்லா மருத்துவமனைகள், அரசுப் பள்ளிக்கூடங்களை நிபுணர்கள் பலரும் ஆவலுடன் பார்த்துச் செல்கின்றனர், அது மாதிரியான நிலையை நாங்கள் பஞ்சாப்பிலும் உருவாக்குவோம் என பதவியேற்பு விழாவில் வாக்குறுதி அளித்தார்.

இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பகவந்த் மான் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரே‌ஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரே‌ஷன் பொருட்களை வழங்குவதற்கான நேரத்தை குடும்ப அட்டை தாரர்களிடம் கேட்டு விநியோகிக்கப்படும். ரே‌ஷன் கடைக்கு சென்றாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் மக்கள் அலைச்சலுக்கு ஆளாக வேண்டாம். நேரமின்மை காரணமாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் போகும் நிலை பஞ்சாப் மக்களுக்கு இனி ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.