Site icon Metro People

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற நாளிதழ் வாசிப்பே முதல் படி: மாணவர்களுக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுரை

ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற நாளிதழ்கள் வாசிப்பே முதல் படி என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தினார்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை மற்றும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில் ஐ.ஏ.எஸ். உட்பட குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வி.கலைச்செல்வி தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் அரசுப் பள்ளியில்தான் முழுவதும் படித்தேன். குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற நாளிதழ்கள் வாசிப்பது தான் முதல் படியாகும். நாளிதழ்கள் வாசிப்பு உங்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர் சில நேரங்களில் அரசியல்வாதிகள், விவசாயிகள் என பல தரப்பினருடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இதனால் பல துறைகளில் ஒருங்கிணைந்த சாமர்த்தியம் அவசியமாகும். நாம் எப்போதும் கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

குடிமைப் பணி தேர்வில் முழுவதும் அறிவார்ந்த நபரை மட்டும் தான் தேர்வு செய்வார்கள் என்று கூற முடியாது. சாதாரண வாழ்க்கையில் இருந்து சேவை நோக்கத்துடன் வருபவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பார்கள். தேர்ச்சி பெற ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி தெரிந்தால் போதுமானது. ஆனால் இந்தி போன்ற பிற மொழிகளை அறிந்து கொண்டால் நமக்கு கூடுதல் பலமாகும்.

எனக்கு தமிழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்ததால் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் முதல் 20 ஆண்டுகள் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த அனுபவம் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொள்கை முடிவு எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் அனைவரும் அவரவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய வெளியுறவு, ரயில்வே உட்பட ஏதாவது ஒரு துறையை தேர்வு செய்யலாம். நான் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வான சமயத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கிராம நிர்வாக அலுவலராக சில நாட்கள் பணிபுரிந்தேன்.

இதைத் தொடர்ந்து 2013-ம்ஆண்டு பட்டா உள்பட வருவாய் துறை ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அந்த அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுக்கான புத்தகங்களையும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் வழங்கினார். கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஷோபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version