2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் தாள் II எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, 2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியானது. தாள் 1-க்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 10 முதல் 15 வரை நடத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

மேலும், இந்தாண்டு கணினிவழித் தேர்வாக (Computer Based Examination) நடத்தப்படுவதால், பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது.  trbpracticetest என்ற போர்ட்டலில் பயிற்சித் தேர்வை தேர்வர்கள் மேற்கொள்ளலாம்.

பயிற்சித் தேர்வு:

தாள் I மற்றும் தாள் II என இரண்டுக்கும் பயிற்சி மேற்கொள்ளலாம்.30 வினாக்கள் கொண்டிருக்கும். 30 நிமிடத்துக்குள் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவும் நான்கு பதில்களைக் கொண்டுள்ளது. ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக பதிலளிக்க வேண்டியதில்லை. வினாத்தொகுப்பின் எந்தவொரு  கேள்விக்கும் முதலில் பதிலளிக்கலாம்.பதில் தெரியாவிட்டால், விடைகளை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.

சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்வதற்கு முன்பாக, எந்த வினாக்கும் பதில்களை மாற்ற முடியும். உறுதி செய்த பிறகு, எந்த மாற்றமும் செய்ய இயலாது.