சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆதிதிராவிடர் நலன் மற்றும் சமூகநலத் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பேசும்போது, “பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை புதுப்பிக்க வேண்டியுள்ளது. பல பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதில் சிரமங்கள் உள்ளன.

தற்போதும்கூட 13,000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே தமிழக அரசிடம் அனுமதி கிடைத்தது. நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகளை குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எழுதுகின்றனர். இவர்களை மனதில்கொண்டே பாடத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதனால், மற்ற மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், பிளஸ் 1 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாததால், பெரும்பாலான பள்ளிகள் பாடங்களை முழுமையாக நடத்துவதில்லை.

மேலும், 10, 11, 12-ம் வகுப்புகளில் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதுவதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில், இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்ற கொள்கையை வகுக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி போல முழு சுதந்திரம் பெற்ற அமைப்பாக செயல்பட வழிவகை செய்வது அவசியம். இதற்கேற்ப மாநிலக் கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளங்களை கற்றல் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.