தென்காசி அருகே பட்டியலின குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடையில் பட்டியலின மாணவர்களுக்கு ஊர்கட்டுப்பாடு காரணமாக தின்பண்டம் வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த 5 பேரும் பாஞ்சாங்குளம் கிராமத்திற்குள் 6 மாதம் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மகேஸ்வரன், ராமச்சந்திரன் இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.