மும்பை: ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரியின் மூலம் அந்த நிறுனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 12 டாலர்கள் வீதம் லாபத்தில் குறைவு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்ததால் ஏற்பட்ட சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை மத்திய அரசு ஈடுகட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. குறிப்பாக தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் கூடுதல் லாபம் ஈட்டி வருகின்றன.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும் டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,230 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸுக்கு லாபம் குறைவு

புதிய வரியால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது கிடைத்து வரும் லாபத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 12 டாலர்கள் வரை லாபம் குறையும் எனத் தெரிகிறது. ரியைலன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி ஓஎன்ஜசி உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் வருவாயும் கடுமையாக பாதிக்கும்.

அதேசமயம் புதிய வரிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.3 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து எச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் ‘‘ பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீது ரூ.6 கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மொத்தமாக மத்திய அரசின் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும்.

அதேசமயம் மத்திய அரசின் புதிய வரிகள் மூலம் ரூ.1.3 லட்சம் கோடியை அரசு வருவாயாக ஈட்டலாம். இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டில் விற்பனை செய்யும்போது கூடுதல் வரியையும் மத்திய அரசு பெற முடியும். இதனால் நஷ்டத்தை ஈடுகட்டி மத்திய அரசு கூடுதல் லாபம் ஈட்டும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தை ஈடுகட்டிய மத்திய அரசு

இதுபோலவே கூடுதல் வரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1.38 லட்சம் கோடியை மத்திய அரசு திரட்ட முடியும் என்று யூபிஎஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் ‘‘டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி வரி மூலம் ரூ.68,000 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என நாங்கள் மதிப்பிடுகிறோம். அதேபோல கச்சா எண்ணெய் மீதான புதிய வரிகள் மூலம் ஈட்டப்படும் கூடுதல் வருவாய் ரூ.70,000 கோடியாக உயரக்கூடும்.

ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரிலையன்ஸ் மற்றும் நயகரா நிறுவனங்களுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 12 டாலர் வீதம் லாடத்தில் இழப்பை ஏற்படுத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.47,000 கோடி இழப்பு ஏற்படலாம்’’ எனக் கூறினார்.