புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம், மருந்து பூங்கா ஆகியவற்றை அமைக்கக் கோரி மத்திய சுகாதார இணை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்தார்.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், புதுச்சேரியில் மாநில சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் ஜிப்மர் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சரிடம், முதல்வர் ரங்கசாமி மனு ஒன்றினை அளித்தார். அதில், “புதுச்சேரியில் கதிரியக்க சிகிச்சை மையம் (Radiography Centre), போதை தடுப்பு மையம், மருத்துவப் பல்கலைக்கழகம், 200 படுக்கைகள் கொண்ட தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் மருந்து பூங்கா (Pharma Park) ஆகியவற்றை அமைக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.