டெல்லி மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்களில் வெற்றி பெற்றுள்ளது. “பிரதமரின் ஆசீர்வாதத்தை கோருகிறேன்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலையில் முடிவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்று அருதிப்பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 வார்டுகளிலும், சயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியாத நிலையிலும், அதன் மாநகராட்சியை கடந்த 15 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த கட்சி பாஜக, இம்முறை அதனை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்திருக்கிறது.

தேர்தல் வெற்றியை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது: “டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியின் வளர்ச்சிக்கு பாஜக மற்றும் காங்கிரஸின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அவர்களின் ஒத்துழைப்பை கோருகிறேன்.

இதேபோல், டெல்லியை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பிரதமரின் ஆசீர்வாதத்தை கோருகிறேன். ஊழலற்ற மாநகராட்சியாக டெல்லி மாநகராட்சியை மாற்றுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

2017 மாநகராட்சித் தேர்தல் முடிவுகள்: கடந்த 2017-ல் நடைபெற்ற டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் பாஜக 181 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டது. ஆம் ஆத்மி கட்சி 48 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 30 வார்டுகளில் வெற்றி பெற்றது.