நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று (ஆகஸ்ட் 6) மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி, ரெப்போ (வட்டி) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகளை வெளியிட்டுப் பேசிய ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்புகளை உறுதி செய்து வருவதாகக் கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இருப்பினும் பணவீக்கத்தையும், அதிகரித்து வரும் விலைவாசியையும் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனையையும் எடுக்க ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.