“ரிஷப் பந்த் நலமுடன் இருக்கிறார். நாங்கள் அவரை சிரிக்க வைத்தோம்” என நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கெர் தெரிவித்துள்ளனர்.

25 வயதான ரிஷப் பந்த் டெல்லியில் நேற்று அதிகாலை உத்தராகண்டில் உள்ள ரூர்க்கி பகுதிக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தனியாக புறப்பட்டுச் சென்றார். தனது தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே தகவல் ஏதும் கொடுக்காமல் கிளம்பி உள்ளார். காலை 5.30 மணி அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் சென்ற போது சாலை தடுப்பின் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை அந்த வழியாக சென்ற ஹரியாணா போக்குவரத்து கழக ஒட்டுநர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரும் அவருடன் பணியாற்றிய ஊழியரும் விரைந்து செயல்பட்டு காரில் படுகாயங்களுடன் சிக்கியிருந்த ரிஷப் பந்த்தை மீட்டு அருகில் உள்ள சக்சாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரிஷப் பந்தின் நெற்றியில் இரண்டு இடங்களில் கீறல் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரலில் காயமும் முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதேவேளையில் தீக்காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரிஷப் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆஷிஷ் யாக்னிக் கூறும்போது, “எலும்பியல் நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ரிஷப் பந்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக உள்ளது. கவலை அடையும் நிலையில் இல்லை” என்றார்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய அணி வீரர் ரிஷப் பந்தை பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கெர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அனில் கபூர், “அவர் நலமாக இருக்கிறார். ரசிகர்களாக நாங்கள் அவரைச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாடுவதைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம். அவர் உடல்நலம் பெற்று திரும்ப பிரார்த்திப்போம்” என்றார்.

அனுபம் கேர் பேசுகையில், ‘‘எந்த பிரச்சினையுமில்லை. நாங்கள் ரிஷப் பந்த், அவரது தாயார் மற்றும் உறவினர்களை சந்தித்தோம். எல்லோரும் நலமுடன் இருக்கின்றனர். நாங்கள் ரிஷப் பந்தை சிரிக்க வைத்தோம்” என்றார்.