சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மருத்துவமனை யின் தலைவர் முகமது ரேலா,ரோபோடிக் கல்லீரல் தான அறுவைசிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறுவை சிகிச்சைக்கான படத்துடன் விளக்கினார்.

பின்னர், அறுவை சிசிச்சைமையத்தை திறந்து வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் ரேலாமருத்துவமனையை நான் திறந்துவைத்தேன். இன்று உலகத்தரமானமருத்துவமனையாக இது பெயர்எடுத்துள்ளதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மருத்துவர் முகமது ரேலா உலகப் புகழ்பெற்றவர். மயிலாடுதுறை அருகில்கிராமத்தில் பிறந்தவர். 4,500-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை அவர் செய்துள்ளார். பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு அவர் செய்த சிகிச்சைக்காக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார். எந்த வயதானவர்களாக இருந்தாலும், எவ்வளவு மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவராக ரேலா திகழ்ந்து வருகிறார். இத்தகைய திறமைசாலிக்காக மருத்துவமனையை உருவாக்கி, அவரதுபெயரையே வைத்துக் கொடுத்தநாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

கரோனா என்ற கொடிய வைரஸ்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நமது நடைமுறைகளை மாற்றியிருக்கிறதா என்றால் இல்லை. ஊரடங்கை ஓரளவுக்கு தளர்த்தினால் உடனடியாக அனைவரும் கூட்டமாக சேர்ந்து விடுகிறோம். அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை உணராத சிலர் இருப்பதால்தான்வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இன்னும் தாமதமாகிறது. இந்தச் சூழலில் அரசு மட்டுமல்ல; இதுபோன்ற மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்த கரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தில் செயல்பட மருத்துவத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. அவை பல நேரங்களில் மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாததாக இருந்து விடுகின்றன. இத்தகைய சூழலில்தான் ரேலா மருத்துவமனை போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்வேறு மருத்துவமனைகள் உருவாக வேண்டும்.அனைத்து நோயாளிகளுக்கான அதிநவீன சிகிச்சை மையமாகரேலா மருத்துவமனை திகழ வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ரேலாமருத்துவமனை தலைவர் முகமதுரேலா, ஜே.ஆர்.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் ஜெ.ஸ்ரீநிஷா, ஜெகத்ரட்சகன் எம்பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.