கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ‘பொன்னியின் செல்வன்’ வெற்றி விழா கொண்டாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய பார்த்திபன், “மணிரத்னத்தின் மூலமாக ‘பொன்னியின் செல்வன்’ படம் திரைக் காவியமாகியிருக்கிறது. ஒரு படத்தில் 50 காட்சிகள் நடித்து, அந்தப் படம் 5 ஷோ ஓடுவது கடினமாக உள்ளது. வெறும் 5 சீன்கள் நடித்து ரூ.500 கோடி வசூலித்துள்ள படத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

கார்த்தி பேசுகையில், ”எல்லோரும் ஒரு செட்டில் இருந்து பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. அதை இன்னும் 10 வருடங்களுக்கு பேசிக்கொண்டிருக்கலாம். படத்தை ப்ரமோட் செய்தது தன் அனுபவம். புது மக்கள், புது மொழியில் பேசியது சிறப்பாக இருந்தது. படத்தை திரையில் பார்க்கும்போது புதிதாக இருந்தது. தமிழ்நாடு கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன்” என்றார்.

விக்ரம் பேசுகையில், ”என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அதன் பாதிப்பு நீண்டுகொண்டேயிருக்கிறது. இந்தப் படம் எனக்கு பெரிய எமோஷன். இத்தனை தலைமுறைகள் நாவலை படிக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல விஷயம் அது” என்றார்.

மணிரத்னம் பேசுகையில், ”இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்களுக்கு நன்றி. நடிகர், நடிகைகள் சிறப்பாக பணியாற்றினர். கரோனா காலத்தில் வெயிட் போடாமல் கடினமாக உழைத்தவர்களுக்கு நன்றி” என்றார்.

இதையடுத்து படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.