மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க, 52 கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராக வேண்டி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையில், ரூ.17 கோடியே 36 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

இதில், பல விதங்களில் பள்ளி, கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகையில் ரூ.4 கோடி, பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு ரூ.58 லட்சம், ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பலமுறை கல்வி உதவித்தொகை பெயரில் ரூ.13 லட்சம், கல்வி உதவி தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி ரூ.24 லட்சம் முறைகேடு, ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்துப் பலமுறை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகை பெற்றது, வேறு மாநில மாணவர்களுக்கு, மாணவர் அல்லாத நபருக்கு என வெவ்வேறு முறையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த முறைகேட்டில் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை – அறிவியல் கல்லூரி என 52 கல்லூரி நிர்வாகத்தினர் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வித் உதவித் தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கல்வி உதவித் தொகை முறைகேடு குறித்து நேரில் விளக்கம் அளிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் கல்லூரி முதல்வர்கள் சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.