விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியாக ரூ.19,500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார்.

நாடு முழுவதும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஏற்கெனவே 8 தவணைகளாக நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 9-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இன்று பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் நல நிதியை மோடி விடுவிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பலன்பெறும். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடுகிறார். இத்தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ