தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பில் கன்டெய்னர் முனையம் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக, அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த டிபி வேர்ல்டு குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோவையில் ரூ.2,000 கோடியில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்கு பூங்கா மற்றும் தகவல் தரவு மையம் ஆகியவற்றை நிறுவத் திட்டமிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்
துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழகத்தில் ஏற்கெனவே டிபி வேர்ல்டு குழுமம் ரூ.2,000 கோடி முதலீடு செய்து, 4,000 பேருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள், சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது முகாம் அலுவலகத்தில் இருந்து, அம்பத்தூரில் ரூ.2,500 கோடி மதிப்பில் அமைய உள்ள என்டிடி குளோபல் டேட்டா சென்டர்ஸ் மற்றும் கிளவுடு இன்ஃப்ரா ஸ்டரக்சர் நிறுவனத்தின் தகவல் தரவு மையத்துக்கு காணொலிக்
காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த மையம் 5.89 ஏக்கர் பரப்பில், 8.25 லட்சம் சதுரடியில் அமைய உள்ளது.

என்டிடி நிறுவனம், ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு மூலம், 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். இதில், 50 மெகாவாட் சூரிய
மின்சக்தி திட்டமும் அடங்கும்.

இந்த, நிகழ்ச்சிகளில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறை செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல்,
தொழில் வழிகாட்டி நிறுவனமேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.