பொதுத்துறை வங்கிகளிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலான ருச்சி சோயா நிறுவனம் தற்போது ரூ.2,925 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு நாள்தோறும் ரூ.1 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில் இருந்த அந்த நிறுவனம் தற்போது கடனற்ற நிறுவனமாக மாறியுள்ளது.

நாட்டின் முன்னணி சமையல் எண்ணெய், வனஸ்பதி தயாரிப்பு நிறுவனமான நாக்பூரைச் சேர்ந்த ருச்சி சோயா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளிடம் ருச்சி சோயா ரூ.12,146 கோடி கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் தவித்தது. வங்கிக் கடனில் 43 சதவீதம் மட்டுமே திருப்பி செலுத்தியிருந்த நிலையில் திவால் நோட்டீஸ் வழங்கி இருந்தது.

நொடிந்து போன ருச்சி சோயா நிறுவனத்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி கையகப்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு ரூ.4,350 கோடிக்கு ருச்சி சோயாவை பதஞ்சலி வாங்கியது. அப்போது பொதுத்துறை வங்கிகளிடம் ருச்சி சோயா வாங்கிய ரூ.3,250 கோடி மதிப்பிலான கடன்களை திருப்பி அடைக்க பதஞ்சலி ஒப்புக் கொண்டது. நாள்தோறும் அந்த நிறுவனம் கடனுக்காக ஒரு கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

அடுத்த சில மாதங்களில், பதஞ்சலி ஆயுர்வேத பிரிவு உணவு வணிகத்தை ருச்சி சோயாவுக்கு மாற்றியது. உணவு அல்லாத, பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பொருட்களை இந்த பிரிவில் மாற்றியது. கடந்த ஆண்டு பதஞ்சலி தனது பிஸ்கட் வணிகத்தை ருச்சி சோயாவுக்கு ரூ.60 கோடிக்கு மாற்றியது.

ருச்சி சோயா நிறுவனத்துக்கு ரூ.3250 கோடி கடன் இருந்தது. இந்த கடன் அனைத்தையும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அடைக்க பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டது. ருச்சி சோயா நிறுவனத்தில் ஏற்கெனவே ரூ.1,290 கோடிக்கு கோடக், யுடிஐ, ஆதித்யா பிர்லா சன்லைப் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இதுமட்டுமின்றி ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் வெளியிட்டு முதலீடு திரட்ட பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்தது. இதன் மூலம் ரூ.4300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 35 சதவீதப் பங்குகளை சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் அதிக முதலீடு வைத்திருக்கும் தனிநபர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி பங்கு வெளியீடு முடிந்துள்ளது.

இந்திநலையில் பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ.2,925 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தி கடனற்ற நிறுவனமாக மாறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கி கூட்டமைப்பில் உள்ள மற்ற வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் கொண்ட வங்கிக் கூட்டமைப்புக்கு பணம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணம் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாக ருச்சி சோயா தெரிவித்துள்ளது.