பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) பொதுப் பங்கு வெளியீடு மூலம் 800 கோடி டாலரை (ரூ.60,000 கோடி) திரட்ட உத்தேசித்துள்ளது. பொதுப் பங்கு வெளியீடு மார்ச் 11-ம் தேதி நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

பொதுப் பங்கு வெளியிடு வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எல்ஐசி எடுத்து வருகிறது. பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) ஒப்புதல் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் பங்கின் உயர்ந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இது தொடர்பாக எல்ஐசி நிர்வாகம் தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையின் முழுமையான வீரியத்தை பங்கு வெளியீடு பரிசோதிக்க உள்ளது. இதுவரையில் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 250 கோடி டாலர் பேடிஎம் நிறுவனம் கடந்த ஆண்டு திரட்டியதுதான் அதிகபட்ச தொகையாகும்.

கடந்த ஆண்டு பங்கு வெளி யீட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் அவை நிர்ணயித்த பங்கு விலை மதிப்புக்கும் கீழான மதிப்பில்தான் வர்த்தகமாயின. நிறுவனங்களின் உண்மையான மதிப்பீட்டைவிட அதிகளவில் முன்னிறுத்தப்பட்டது மற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அவற்றின் விலைகள் சரிந்தன.

பொதுப் பங்கு வெளியீட்டு தினத்தில் மாறுபாடு இருக்கலாம். இருப்பினும் நிதி ஆண்டு முடிவதற்குள் பங்கு வெளியீடு மூலம் குறிப்பிட்ட தொகையை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்ஐசி ஐபிஓ குறித்த விளக்க அறிக்கையில் அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 800 கோடி டாலர் எனத் தெரிகிறது.

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பொதுப் பங்கு வெளியீடு இருக்கும் என கடந்த மாதத்திலேயே எல்ஐசி நிர்வா கம் சார்பில் ராய்ட்டர்ஸுக்கு செய்தி அளிக்கப்பட்டது. ஆனால் அது பற்றிய விவரம் தெரிவிக்கவில்லை.

பொதுப் பங்கு வெளியீட்டு அளவு 800கோடி டாலராகஇருக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் இது மிக அதிகத் தொகையாகக் கருதப்படும்.

எஸ்பிஐ கேப்ஸ், சிட்டிகுரூப், நொமுரா, ஜேபிமார்கன், கோல்ட் மேன் சாக்ஸ் ஆகியவையோடு சர்வதேச மூலதன வங்கிகள் மற்றும் லீட் மேலாளர்கள் ஆகியோர் எல்ஐசி பங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.

எல்ஐசி பங்கு வெளியீட்டில் ஈடுபட உள்ளதால் மற்ற காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்துள்ளனர். எல்ஐசியில் முதலீடு செய்ய காத்திருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துஉள்ளனர்.

66 ஆண்டுகளாக காப்பீட்டுத் துறையில் முன்னணியில் திகழும் எல்ஐசி நிறுவனத்தில் 28 கோடி பாலிசிகள் உள்ளன. 2020-ம்ஆண்டு சர்வதேச அளவில் காப்பீட்டு நிறுவனங்கள் திரட்டிய பிரீமியத்தில் மிக அதிக அளவு திரட்டிய நிறுவனமாக எல்ஐசி திகழ்ந்தது.