ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. எனினும், ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி வெடித்துச் சிதறியது. இத னால் பாலத்தின் ஒரு பகுதி சேத மடைந்தது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் கூறும்போது, “கிரீமியா பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாலத்தை தகர்க்கும் முயற்சி தீவிரவாத செயலுக்கு நிகரானது. உக்ரைன் ராணுவம்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது” என்றார். ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சில நகரங்கள் மீது நேற்று காலையில் ரஷ்ய ராணுவம் 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஐ.நா. சபையில் ரஷ்யா டான்பஸ் உள்ளிட்ட 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைக்கும் விவகாரம் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விவாதம் ஆனால் திசைமாறி அண்மையில் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் தொடர்பான விவாதமானது.

ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதர் செகெய் கிஸ்லிட்ஸியா பேசுகையில், “ரஷ்யா தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தத் தாக்குதலில் என் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தரப்பில் நிலையற்ற சர்வாதிகாரம் மேலோங்கி இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை வாய்ப்பில்லை. கிழக்கு உக்ரைனில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளை நாங்கள் பாதுகாக்க நினைக்கிறோம். அதற்காக நாங்கள் குற்றஞ்சாட்டப்படுகிறோம். அங்குள்ள எங்கள் சகோதரர்கள் உயிரைக் காக்க போராடுகிறோம். அவர்களின் மொழி உரிமைக்காக, அவர்கள் விரும்பிய தலைவர்களை அவர்கள் கொண்டாடுவதற்கான உரிமையை வேண்டி போராடுகிறோம். பாசிஸ சக்திகளிடமிருந்து அவர்களைக் காக்கப் போராடுகிறோம்” என்றார்.

இதற்கிடையில் வரும் நாட்களில் உக்ரைன் மீதான தாக்குதல் இன்னும் அதிகமாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இதற்கிடையில் இந்தியர்கள் யாரும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை ரஷ்யா பொது வாக்கெடுப்பு நடத்தி 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைக்கத் தயாராகிவரும் நிலையில் உக்ரைன் உலக நாடுகளின் ஆதரவைக் கோரி வருகிறது.