இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கும் மக்கள் எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நிலைமை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் ஜெலன்ஸ்கி பேசும்போது, “ இலங்கை உட்பட உலகின் பல இடங்களில் நெருக்கடி நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம். உக்ரைன் மீது படை எடுத்து உலகம் முழுவதும் பொருளாதார அதிர்ச்சியை ரஷ்யா ஏற்படுத்தி இருக்கிறது. இதனை ரஷ்யாவின் தந்திரம் என்றே கூறலாம். உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள், எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இது எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது.” என்றார்.

உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக சுமார் 94 நாடுகளில் குறைந்த வருவாய் கொண்ட சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்தில், கருங்கடல் வழியாக உக்ரைனின் உணவு பொருட்கள் ஏற்றுமதி பாதுகாப்புக்கு உறுதி கூறப்பட்டது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here