ஆர்விஎம் இயந்திரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ( ஆர்விஎம் எனப்படும் ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். இதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் இன்று (ஜன.1) வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொண்டர்களை சந்தித்ததால், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து கூறினார்.

பின்னர் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆர்விஎம் இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதது. அதற்கு பதிலளித்த அவர், “டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆர்விஎம் இயந்திரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக தரப்பில் நிர்வாகிகள் நிச்சயம் கலந்துகொள்வார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நிர்வாகிகளை தலைமைக் கழகம் முடிவு செய்யும்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால்தான், அந்த இயந்திரத்தில் உள்ள நிறை, குறைகளை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். எனவே அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும். அந்த இயந்திரத்தின் நிறை,குறைகளைக் கண்டறிந்து, உண்மையில் பயனளிக்கக்கூடியதாக இருந்தால் அதை வரவேற்போம். அது பயனளிக்காது என்று தோன்றினால் நிச்சயம் தேமுதிக அதை எதிர்க்கும்” என்றார்.

மேலும், தேமுதிகவில் உட்கட்சித் தேர்தல்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது புதிய வருடம் பிறந்திருக்கிறது. வெகு விரைவில், தலைவரால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு அறிவிக்கப்படும். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், தேமுதிகவின் திட்டங்களும் செயல்பாடுகளும் அறிவிக்கப்படும்.

தேமுதிகவைப் பொருத்தவரை, என்றைக்குமே கேப்டன்தான் தலைவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவே தலைவர் விஜயகாந்த், யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கிறார் என்பது செயற்குழு, பொதுக்குழுவுக்கு பிறகுதான் தெரியும். நிச்சயமாக நல்ல தகவலை தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தமிழகத்தை ஆளும் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 வழங்கியது போதாது, ரூ.5000 வழங்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் கூறினார். இப்போது திமுக ஆட்சி நடக்கிறது, ஆனால் ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாகவும், அரிசி மற்றும் சர்க்கரை மட்டும் வழங்குவதாக கூறியிருந்ததை யாராலும் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

விவசாயிகள் இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டுதான், அனைத்து விவசாயிகளும் கரும்பை விளைவித்துள்ளனர். அனைத்து தரப்பு எதிர்ப்புகளையும் தெரிந்துகொண்ட பின்னர், தாமதமாக கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன் நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலைப்பாட்டை திமுக எடுப்பதை தேமுதிக நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது” என்று அவர் கூறினார்.