சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சபாபதி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நவம்பர் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளது படக்குழு.

இதில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர், நாயகியாக ப்ரீத்தி வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பாஸ்கர் ஆறுமுகம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக லியோ ஜான் பால் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.