சேலத்தில் காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லூரி சாலைகளில் மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக இளைஞர்கள் காதலை வெளிப்படுத்தி ‘ஈவ்-டீசிங்’கில் ஈடுபடுகின்றனரா என போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ கொண்டாடப்படும் நிலையில், இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்திட இந்நாளை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து அட்டை, ரோஜா மலர்கள் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளது. காதலர் தினத்தில் பெண்கள் சுதந்திரமாகவும், எவ்வித அச்சமின்றி பொதுவெளிகளில் செல்வதை உறுதிப்படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல் துறை மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி கூறியது: “காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபடும் காதலர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு தலை காதலில் ஈடுபடும் இளைஞர்கள் பெண்களை வலுக்கட்டாயப்படுத்தி காதலை தெரிவிப்பதோ, பொதுவெளிகளில் அநாகரீகமாக நடந்து கொள்ளவதோ கூடாது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு எவ்வித இடையூறும் இளைஞர்கள் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் காவல் துறையினர் அக்கறையுடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகரத்தில் உள்ள மகளிர் காவலர்களுடன், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் ரோந்து முறையில் மநாகரம் முழுவதும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில்வே நிலையங்கள், பள்ளி, கல்லூரி, கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மாறுவேடத்தில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பெண்களை வழிமறித்து காதலை வெளிப்படுத்துவது, ஈவ்-டீசிங் செய்வது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதலர் தினத்தை சுயகட்டுப்பாடுடன் காதலர்கள் கொண்டாட வாழ்த்துகள்” இவ்வாறு அவர் கூறினார்.