Site icon Metro People

கொடநாடு வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை? காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் தனது மனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என நீதிபதி தெரிவித்தார். இது குறித்து மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், நீலகிரி நீதிமன்றத்தில் வழக்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரவுள்ளதால், இந்த மனு தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Exit mobile version