கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது தீவிரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், மத்திய புலன் விசாரணை அமைப்புகள் மாநில காவல்துறைக்கு விசாரணையில் உதவி வருவதாக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடகா டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக போலீஸார் மத்திய அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த தாக்குதலில் காயமடைந்தவர் பேசும் சூழலில் இல்லை. இதுவரை நடந்த விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது. உறுதியான தகவல்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கிடைக்கும்” என்றார்.