சென்னையில் இரவு நேர ஊரடங்கிலும் தடையை மீறி இயக்கப்படும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர்.

கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தளர்வுகளற்ற ஊரடங்கில் மட்டும் போலீஸார் வாகனங்களைப் பறிமுதல் செய்து வந்தனர். தற்போது, கரோனா பரவல் வேகம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, போலீஸார் கண்காணிப்பை பலப்படுத்துவதுடன், தடையை மீறுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி, சென்னையில் போலீஸார் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,174 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ரூ.6.35 லட்சம் அபராதம் வசூலித்தனர்.

மேலும், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி இயக்கப்பட்டது தொடர்பாக 1,205 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இரவு ஊரடங்கை மீறும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 517 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 226 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.

முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ரூ.6.35 லட்சம் அபராதம் வசூலித்தனர்.