தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” குறித்த அரசாணை தற்போது வெளியிடப்படுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்கப்படும் எனவும், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் ரூபாயும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்படுள்ளது.

சிறந்த ஊராட்சிகளை தேர்ந்தெடுக்க மாநில அளவில் ஊரகவளர்ச்சித்துறையின் இயக்குனர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படுள்ளது.