கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஐடிஐ பின்புறம் 7.5 ஏக்கர் நிலப் பரப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. தலா 400 சதுர அடி பயன்பாடு கொண்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகள் ரூ.81 கோடி செலவில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த குடியிருப்புக்கு விண்ணப்பிக்கும்பயனாளிகள் உளுந்தூர்பேட்டை நகராட்சிபகுதியில் வசித்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளாக இருத்தல்வேண்டும். சொந்த வீடு இருத்தல் கூடாது என்ற தகுதிகள் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதல்கட்டமாக 264 குடியிருப்புக்கு தலா ரூ.84 ஆயிரமும், 2-ம் கட்டமாக கட்டப்பட்ட 512 குடியிருப்புகளுக்கு தலா ரூ.2.67 லட்சமும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே கடந்த ஆட்சியில் குடியிருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் குறிப்பிட்ட தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சாவி வழங்க இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்பணி தடைபட்டது. குடியிருப்பு கோரிவிண்ணப்பித்தவர்களுக்கு வீடு ஒதுக்கமுடியாத நிலை உருவானது.

இதற்கிடையில் 738 பேர் விண்ணப்பித்ததில் 34 பேர் மட்டுமே அரசு நிர்ணயித்த தகுதியுடையவர்கள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் சட்டப்பேரவையில் பேசினார். பின்னர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள், குடியிருப்பு பகுதிகளையும், விண்ணப்பித்தவர்கள் குறித்தும் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்ஷ்ரவன்குமார், குடியிருப்புக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதில் 34 பேர் மட்டுமே தகுதி உடைய நபர்கள் என்பதுநிரூபணமானதால், தகுதிகள் அடிப்படையில் மட்டுமே குடியிருப்பு ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக உளுந்தூர்பேட்டை நகராட்சியில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய குடியிருப்புக்கு 1,523 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணனிடம் கேட்டபோது, “கடந்த ஆட்சியில் அவசரகதியில் சில தவறுகளை செய்துள்ளனர். தற்போது அவை கண்டறியப்பட்டு, முழுத் தகுதியுடையவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே அரசியல் கட்சியினர் தலையீடின்றி, உண்மையான பயனாளிகளுக்கு குடியிருப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.