புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களின்போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. தற்காலிகமாக பணியாளர்களாக நியமித்து பின் அவர்களே பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுவை பொதுப்பணி துறையில் எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை தாக்கல் செய்ய அம்மாநில பொதுப் பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, 2016-ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து புதுச்சேரி அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “பணி நியமனங்கள் தொடர்பாக புதுச்சேரி அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “அனைத்து நியமனங்களும் போட்டித்தேர்வு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மேற்கொள்ள வேண்டும். தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும், அரசு பணியில்ச் எந்த சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது. அரசியல் சட்ட விதிகளை பின்பற்றியே அனைத்து நியமனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக நியமனங்களிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து, விதிகளை பின்பற்ற வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். தேர்வு நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.