திருமணத்தை மீறிய பாலுறவை ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு. சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம், இந்தச் சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அறிவித்துள்ளதே.

இது மட்டுமா? இன்னும் இருக்கிறது… – திருமணத்தை தாண்டிய பாலுறவுக்கு தடை மட்டுமல்லாமல் இன்னும் பல கெடுபிடிகளை இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. திருமணமாகாதவர்கள் இணைந்து வாழ தடை விதித்துள்ளது.

நாட்டின் அதிபர், அரசு அமைப்புகளின் தலைவர்களை அவமதித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தேசத்துக்கு எதிராக கருத்தியலை பரப்புபவர்கள், அறிவிப்பு இல்லாமல் போராட்டங்களை நடத்துபவர்கள் மீதும் புதிய தண்டனைகளை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசிய அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்தே இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சட்ட மசோதாக்கள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு உடனடியாக அமலுக்கு வராது. அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய ஏதுவாக இந்தக் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாஅ அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை தாண்டிய பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக்கியிருந்தாலும், திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை இந்தோனேசியா தடை செய்யவில்லை.

இது குறித்து இந்தோனேசிய சுற்றுலா துறை துணைத் தலைவர் மவுலானா யுஸ்ரான் கூறுகையில், “கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் பொருளாதாரமும், சுற்றுலாவும் மீண்டு வரும் சூழலில் இதுபோன்ற கோட்பாடுகள் முற்றிலும் வளர்ச்சிக்கு எதிரானதாக இருக்கும். அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக வேதனைப்படுகிறேன். அரசாங்கத்திற்கு இது குறித்து எடுத்துக் கூறியுள்ளோம்” என்றார்.

ஒரு முதலீட்டு மாநாட்டில், இந்தோனேசியாவுக்கான அமெரிக்க தூதர் சங் கிம் அளித்த பேட்டியில், “இந்த செய்தி குறைந்த அளவிலான வெளிநாட்டு முதலீட்டிற்கு வழிவகுக்கும். இந்தோனேசியாவுக்கான சுற்றுலா குன்றும். தனிநபர்களின் தனிப்பட்ட முடிவுகளை கிரிமினல் குற்றமாக்குவது இந்தோனேசியாவில் முதலீடு செய்ய வேண்டுமா என்பதை மற்ற நாடுகள் யோசனை செய்வதற்கு தள்ளும்” என்று எச்சரித்தார்.

இந்தோனேசிய நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆல்பர்ட் ஏரிஸ், ”இந்த புது சட்டங்கள் நன்நெறியை பேணவே கொண்டு வரப்படுகின்றன. குற்றம் செய்பவர்களின் கணவனோ, மனைவியோ அல்லது பாதிக்கப்பட்ட குழந்தைகளோ தான் புகார் கூறப்போகின்றனர். இது இந்தோனேசிய நாட்டின் மாண்பினையும், திருமணம் எனும் அமைப்பின் மாண்பினையும் பாதுகாக்க அவசியமாகிறது” என்றார்.

இந்த மசோதாவை எதிர்ப்போர், “இது கருத்து சுதந்திரத்தை தடுக்கும். ஜனநாயக சுதந்திரங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இது உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயகமான இந்தோனேசிய ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஈடாகும்” என்று கூறியுள்ளனர்.