பங்குகள் மீதான தனது உரிமையை தனக்குத் தெரியாமல் மாற்றிவிட்டதாக ‘சோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேவேளையில், ‘இது கற்பனைக் கதை” என்று அதை ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டமாக மறுத்துள்ளார். தம்பதியர் இருவரும் கடந்த 2021-ல் விவாகரத்து வேண்டி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகினர். தற்போது இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது.

அமெரிக்க நாட்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இது குறித்த செய்தி வந்துள்ளது. அதில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி மற்றும் ஆட்டிசம் பாதித்த மகனுக்கு நியாயமாக சேர வேண்டிய பங்குகளை தனது சகோதரியின் பெயருக்கு மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் பிரமிளா தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஸ்ரீதர் வேம்பு – பிரமிளா ஸ்ரீனிவாசன் தம்பதியர் சுமார் 25 ஆண்டு காலம் இணைந்து வாழ்ந்தவர்கள். கடந்த 2020-ல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார் ஸ்ரீதர் வேம்பு. அதற்கடுத்த ஆண்டே தம்பதியர் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தை நாடினர். கலிபோர்னியாவில் உள்ள சட்டத்தின்படி இணையரின் ஒப்புதலைப் பெறாமல் ரகசியமாக சொத்துகள் மீதான உரிமையை மாற்ற முடியாது என ஃபோர்ப்ஸ் இதழில் பிரமிளாவின் வழக்கறிஞர் ஜான் பார்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ல் நிறுவப்பட்ட ‘சோஹோ’ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு 43% பங்குகள் மற்றும் அவரது மாமா ராஜேந்திரன் தண்டபாணி 57% பங்குகளை வைத்திருந்ததாக பிரமிளா தெரிவித்துள்ளார். மேலும், ZPCL என்ற நிறுவனத்திற்கு பங்குகளின் உரிமை மாற்றப்பட்டது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு 50 மில்லியன் டாலருக்கு இது கைமாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கான பரிவர்த்தனை குறித்த விளக்கத்தையும் அவர் கேட்டுள்ளார். ஆனால், ஸ்ரீதர் வேம்புவுக்கு இதில் வெறும் 5% பங்குகள் உரிமையாகும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தன்னையும், தனது மகனையும், கணவர் ஸ்ரீதர் வேம்பு கைவிட்டு சென்றதாகவும் நீதிமன்றதத்தில் பிரமிளா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நான் ஒருபோதும் நிறுவனத்தில் எனது பங்குகளை யாருக்கும் மாற்றவில்லை. நிறுவனத்தின் 27 ஆண்டு கால வரலாற்றில் முதல் 24 ஆண்டுகள் நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் பிறகு இந்தியா திரும்பினேன். இந்த நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டது.

நான், பிரமிளா மற்றும் எனது மகனை கவனிக்காமல் கைவிட்டுள்ளதாக சொல்லப்படுவதை ஏற்க முடியாது. அவர்களுக்கு சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளேன். எனது 3 ஆண்டு கால அமெரிக்க ஊதியம் அவர் வசம் உள்ளது. அவருக்கு வீடு கொடுத்துள்ளேன். அவர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சோஹோ ஆதரவு வழங்கி வருகிறது.

நானும், பிரமிளாவும் ஆட்டிசம் பாதிப்பு கொண்ட எங்கள் மகனை கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்கி வருகிறோம். ஆனாலும் எங்கள் திருமண வாழ்வு முற்று பெற காரணமே ஒரு சில அழுத்தங்கள்தான். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுவதும் கற்பனையே” என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் கல்வி கூடத்தில் படித்தவர் ஸ்ரீதர் வேம்பு. தொடர்ந்து கடந்த 1989-ல் முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு தான் படித்த கல்லூரியில் பிராமிளாவை சந்தித்தார். இருவரும் கடந்த 1993-ல் திருமணம் செய்து கொண்டனர். 1996-ல் டோனி தாமஸ் உடன் இணைந்து சோஹோ நிறுவனத்தை நிறுவினார். முனைவர் பட்டம் பெற்ற பிராமிளா சொந்தமாக மெடிக்கல் மைன் எனும் நிறுவனத்தை தொடங்கினார். 2020-ல் இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு தமிழகத்தின் தென்காசியில் உள்ள மத்தலாம்பாறை கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார்.